சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன், இன்று காலை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை கே.கே நகரில் இன்று காலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 3.9.2004ல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
சென்னையை சேர்ந்த கூலிப்படை தலைவன் கதிரவன் தலைமையில் சின்னா, அம்பிகாபதி, நண்டு பாஸ்கர், குமார், ஆந்திரா குமார், அணில் குமார், மீனாட்சி சுந்தரம் ஆகியோர், சங்கரராமனை தீர்த்து கட்டியது தெரியவந்தது. காஞ்சி சங்கர மடத்திற்கு நெருக்கமான அப்பு என்பவர் மூலம் கூலிப்படை ஏற்பாடு செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. சங்கர மடத்தின் கான்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம் கூலிப்படைக்கு பணம் கொடுத்த ஆதாரமும் போலீசாருக்கு கிடைத்தது.
இதில் கைதான ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் தம்பி ரகு, கூலிப்படை தலைவன் கதிரவன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு தற்போது புதுவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக 1823 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் 3வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தவர் கதிரவன் (42). இவர் சென்னை கே.கே நகர் வி.வி கிரி தெருவில் வசித்து வருகிறார். இன்று காலை 7.45 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்தார் கதிரவன். அப்போது 2 காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காரில் இருந்து வேகமாக இறங்கி வந்தது. கதிரவன் சுதாரித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை மூட முயன்றார்.
அதற்குள் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது. இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கே.கே. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கதிரவனை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழ¤யிலேயே அவர் இறந்தார். கதிரவன் சடலத்தை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது தொடர்பாக கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரவனை கொன்றது கூலிப்படையா, சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கிறார்கள்.