நில மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை
கோலார்: நில மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ அம்ரேஷ்க்கு கோலார் மாஜிஸ்திரேட் கோர்ட் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் முல்பகால் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அம்ரேஷ் கடந்த 2003ம் ஆண்டு முல்பகால் தாலுகாவில் உள்ள சொன்னவடி கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அப்போது பெவஹள்ளி கிராமத்தில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து சித்தனஹள்ளியை சேர்ந்த முனியம்மா என்பவருக்கு விற்றார். இதுதொடர்பாக நன்கர்லி காவல் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் செய்தார். கடந்த 10 வருடமாக இந்த வழக்கு கோலார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அம்ரேஷ் மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார். கோர்ட்டில் ஆஜராகியிருந்த எம்எல்ஏ அம்ரேஷ் உடனடியாக சரண் அடைந்தார். அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், ரூ.10 ஆயிரம் ரொக்க உத்தரவாதம் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அம்ரேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.