குப்பையை கிளறிய கோழிக்கு விஷம் : செத்த கோழியுடன் வந்த விவசாயி கொலை வழக்கு பதியுமாறு புகார்
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் மணவாளன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயி. வீட்டில் கோழிகள் வளர்க்கிறார். இதில் ஒரு கோழி, அருகே வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் தோட்டத்தில் சென்று குப்பையை கிளறிவந்தது. தினமும் இது தொடர்ந்ததால், பாலகிருஷ்ணன் டென்ஷன் ஆகிவிட்டார். நேற்று கோழிக்கு விஷம் வைத்துவிட்டார். சிறிது நேரத்தில் கோழி இறந்தது. திடீரென கோழி இறந்ததால் விஜயகுமார் சந்தேகம் அடைந்தார்.
செத்த கோழியை எடுத்துக்கொண்டு ஆலங்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று இரவு வந்தார்.
‘என் கோழியை பக்கத்து வீட்டு பாலகிருஷ்ணன் விஷம் வைத்து கொன்றுவிட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பறவைகள் வதை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், செத்த கோழியுடன் சென்று பாலகிருஷ்ணனிடம் விசாரித்தனர். எலி மருந்து வைத்ததை ஒப்புக்கொண்டு அவர் மன்னிப்பு கேட்டார். இனி இதுபோல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவரை எச்சரித்தனர்.