சென்னை: தென் சென்னை மாவட்டம் திமுக சார்பில் இன்று நடந்த விழாவில் 60 ஜோடிகளுக்கு, திமுக தலைவர் கருணாநிதி திருமணம் நடத்தி வைத்தார். தென் சென்னை மாவட்ட திமுக சார்பில், ‘மார்ச் 1 இளைஞர் எழுச்சி நாள்Õ கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம், அந்த ஜோடிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை வழங்குதல், ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 10,000 பேருக்கு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று காலை நடந்தது. விழாவுக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொது செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், 60 ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திமுக தலைவர் கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் முதல் கட்ட தேர்தல நிதியாக ரூ.2 கோடியை, மாவட்ட செயலாளர் அன்பழகன், கருணாநிதியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் மற்றும் கலைஞர் நகர் (விருகம்பாக்கம் பகுதி) பகுதி செயலாளர் கே.கே.நகர் க.தனசேகரன், இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், பகுதி செயலாளர் வி.எஸ்.ராஜ், அன்பு, தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபாகர் ராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.