கடலூர்: கடலூரில் பாமக போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பாமக, அதிமுக தொண்டர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய தடியடியில் 10 பேர் காயம் அடைந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ், கடலூருக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் உத்தரவிட் டார். இதை கண்டித்து கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள கலெக்டர் இல்லம் அருகே பாமகவினர் இன்று முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகளுடன் எஸ்பி ராதிகா பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் கிர்லோஷ்குமாரை சந்தித்து பேசினர். அப்போது ராமதாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில், பாமக மறியல் போராட்டம் நடந்த இடத்தின் அருகே அதிமுக தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பேசிய முருகுமாறன் எம்எல்ஏ, பாமக, மதிமுக கட்சிகளின் அங்கீகாரம் பற்றி விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் அதிமுகவினரை நோக்கி கற்கள், செருப்புகளை வீசினர். பதிலுக்கு அதிமுகவினரும் கற்களை வீசினர். இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, எஸ்.பி. ராதிகா தலைமையிலான போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். கூட்டத்தினர் நேதாஜி சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாலாபுறமும் சிதறி ஓடினர். போலீஸ் தடியடியில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரு கட்சி மோதலால் கடலூர் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. கடைகள் மூடப்பட்டன. போலீஸ் வாகனங்களும் கல்வீச்சில் சேதம் அடைந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.