அரவக்குறிச்சி: காணும்பொங்கல் தினத்தில் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் சேவல் கட்டு (சேவல் சண்டை) பிரசித்தம். கடந்த 13ம் தேதி துவங்கி இன்று மூன்றாம் நாளாக போட்டி நடக்கிறது. முதல்நாள் 5 ஆயிரம் சேவல்களும், 2ம் நாள் 7 ஆயிரம் சேவல்களும் போட்டியில் கலந்து கொண்டன. இந்த போட்டிக்காக கேரளா, கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை என பல்வேறு இடங்களில் இருந்து சேவல்கள் கொண்டு வரப்பட்டன. சிலர் மினி லாரி, வேன், கார்களில் வந்து பூலாம்வலசில் முகாமிட்டு போட்டியில் கலந்து கொண்டு உள்ளனர். பூலாம்வலசு குளத்தில் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக பிரிந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. 2 சேவல்களை சண்டைக்கு விடுவார்கள். தோற்றுப்போன சேவலை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளரிடம் கொடுத்து விடவேண்டும் என்ற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த சேவல் கட்டு என்று சொல்லப்படும் இந்த போட்டி பூலாம்வலசு கிராமத்தில் 100 வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். இன்று காலை 8 மணிக்கு மூன்றாம் நாள் போட்டி தொடங்கியது. இதற்காக 7 ஆயிரம் சேவல்கள் வந்து உள்ளன. நாளை இறுதிநாள் போட்டி நடைபெறுகிறது. போட்டியை வேடிக்கை பார்க்க சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்களும் திரண்டு உள்ளனர். இதனால் போட்டி நடைபெறும் பகுதி திருவிழா கோலம் பூண்டு உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook