சென்னை: ஏழைகளுக்கு உதவும் வகையில் சென்னையில் 200 சிற்றுண்டி உணவகங்கள்
திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஏழை
தொழிலாளர்கள் உணவுக்கு கையேந்தி பவன்களையே நம்பி உள்ளனர். ஆனால்,
பெரும்பாலான கையேந்தி பவன்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. எனினும் வேறு
வழியின்றி குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த இடங்களிலேயே ஏழை மக்கள்
சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசே சென்னை மாநகரில் 1000
சிற்றுண்டி உணவகங்கள் திறக்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 200 உணவகம்
திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் குடிசை பகுதிகளில்
வாழும் பெரும்பாலான ஏழை மக்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள்,
ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து
வருகின்றனர். தவிர, சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து, சிறிது காலம் தங்கி
செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் அனைவரும்
தங்களது குறைந்த வருவாயில் உணவுக்கென அதிகம் செலவு செய்ய இயலுவதில்லை.
எனவே, அனைவருக்கும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில்
தரமான உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சி பகுதியில், சென்னை
மாநகராட்சியின் மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்களை தொடங்க அரசு
முடிவெடுத்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை நகரில் உள்ள ஒவ்வொரு
வார்டிலும், ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி
உணவகங்களை தொடங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து
உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்துக்காக மாதந்தோறும் 500 டன் அரிசியை
கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிப கழகம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்குவதற்கும் முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். இந்த உணவகங்களில், இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும்,
சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் மற்றும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை
செய்யப்படும். இந்த உணவகங்களின் பணிகளை கண்காணிக்க மாநகர நல அலுவலர்
தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இதன் மூலம், அன்றாட கூலி வேலை
செய்பவர்கள், தள்ளு வண்டி, கை வண்டி ஒட்டுனர்கள் மற்றும் பாரம் சுமக்கும்
தொழிலாளர்கள், ஆட்டோ ஒட்டுனர்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளை
சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் பயன் அடைவார்கள். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தள்ளுவண்டியில்... ரோட்டோரங்களில்
தள்ளு வண்டி கையேந்தி பவன்களில் ஒரு இட்லி - ரூ.4, சாம்பார் சாதம் -
ரூ.18, தயிர் சாதம் - ரூ.15க்கு விற்கப்படுகின்றன. தவிர சாதாரண கடைகளில்
இட்லி - ரூ.5, சாம்பார் சாதம் - ரூ.20, தயிர் சாதம் - ரு.20 விலையில்
விற்கப்படுகின்றன. இவற்றில் கையேந்தி பவன்களில்தான் பெரும்பாலானோர்
சாப்பிடுகின்றனர். ஏழை தொழிலாளிகள் மட்டுமன்றி கம்பெனிகளில் வேலை
செய்பவர்களும் கையேந்தி பவன்களையே விரும்புகின்றனர். விலை குறைவு என்பதால்
கையேந்தி பவன்களிலேயே கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசே
மலிவு விலையில் டிபன் வழங்க 200 ஓட்டல்களை திறப்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook