வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் போர், அடுத்தாண்டு நல்லதொரு முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகளை ஒடுக்க, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இப்படையினர் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களும் அடிக்கடி தாக்குதல் நடத்தியதில் வீரர்கள் பலர் பலியாயினர். இதற்கிடையில், ஆப்கனை விட்டு நேட்டோ படைகள் முழுமையாக விலக வேண்டும் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேட்டோ படையில் இருந்து பிரான்ஸ், இங்கிலாந்து வீரர்கள் வாபஸ் பெற்றனர். அமெரிக்க வீரர்களும் ஏராளமானோர் வாபஸ் பெறப்பட்டனர். வரும் 2014ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படைகளை முற்றிலும் வாபஸ் பெற்று, ஆப்கன் பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு ராணுவம் மற்றும் போலீசாரிடமே வழங்க திட்டமிடப்பட்டது.
அதற்காக இப்போது ஆப்கன் ராணுவம், போலீசாருக்கு அமெரிக்க படை வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாயும் அதிபர் ஒபாமாவும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், ஒபாமா கூறியதாவது: ஆப்கன் பாதுகாப்பை அந்நாட்டிடமே ஒப்படைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தாண்டு இறுதிக்குள் ஆப்கனில் தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தப்படும் போர் நல்லதொரு முடிவுக்கு வரும். ஆப்கனில் இருந்து கணிசமான படைகளை ஏற்கனவே வாபஸ் பெற்றுள்ளோம். இப்போது 66 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் அங்கு உள்ளனர். ஆப்கனில் அமைதியை ஏற்படுத்த அதிபர் கர்சாய் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. விரைவில் பாதுகாப்பு பொறுப்பை ஆப்கனிடமே விட்டுவிட்டு அங்கிருந்து வாபஸ் பெறுவோம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook