மாவோயிஸ்ட்களுக்கு வெடிகுண்டு பாகிஸ்தானில் இருந்து சப்ளை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட்களுக்கு வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து சப்ளை செய்யப்பட்ட பகீர் தகவல் தெரியவந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அங்குள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ளது. கடந்த 7ம் தேதி லடேகரில் மத்திய ரிசர்வ் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 11 வீரர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை எடுத்து சென்று அதில் பயங்கர வெடிகுண்டு வைத்து தைத்து பெரிய தாக்குதலுக்கும் திட்டமிட்டனர். பிரேத பரிசோதனையில் 2.5 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக பிரபாத் மோச்சி என்ற மாவோயிஸ்ட்டை போலீசார் கைது செய்தனர். 6 மாதங்களாக நாய், ஆடுகளுக்கு ஆபரேஷன் செய்து குண்டுகளை வைத்து பார்த்து பயிற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் தாக்குதல் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாகிஸ்தானில் தயாரான வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனா, பாகிஸ்தானில் இருந்து மாவோயிஸ்ட்களுக்கு பயங்கர ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதை உளவுத்துறை கண்டுபிடித்தது. சீனாவில் தயாரான ஆயுதங்கள் மாவோயிஸ்ட்களிடம் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது முதல்முறையாக பாகிஸ்தான் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.