திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் யாத்ரிகர் விடுதி கட்டிடப் பணிக்கு அஸ்திவாரம் தோண்டியபோது பழங்கால பீடம், செப்பு தாழி கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கொள்ளிடம் ஆறு மஞ்சக்கரையில் ரூ.42 கோடி செலவில் தங்கும் விடுதி (யாத்ரிகர் நிவாஷ்) கட்டப்பட்டு வருகிறது. நேற்று 8 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது அஸ்திவார குழியில் ஒரு அடி நீளம், அரை அடி அகலத்தில் சுவாமி சிலை வைக்கும் பீடம், பாதி அரித்து மண்ணில் மக்கிய ஒரு செப்பு தாழி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பணியாளர்கள் கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இவை வருவாய்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்ரீரங்கம் கோயில் யாத்ரிகர் விடுதி கட்டுமான பணியின்போது கண்டெடுக்கப்பட்டுள்ள பீடம், செப்பு தாழி ஆகியவை தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்தி அவை எக்காலத்தை சேர்ந்தவை என கண்டறியப்படும்’ என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook