தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு காவிரி தண்ணீர் பெற்று தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தேமுதிக சார்பில் தஞ்சையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கியும், ஏழை, எளியவர்களுக்கு பொங்கல் பொருட் கள் வழங்கியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: சோழநாடு சோறுடைத்து என்பார்கள். 3 போகம் விளைந்த பகுதிகளில் இன்று ஒரு போகம் கூட விளையவில்லை. இன்று சோழநாடு தற்கொலை நகரமாக மாறிவிட்டது. அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் இங்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு விரைவில் மக்கள் ஓய்வு கொடுக்கப்போகிறார்கள். மத்திய அரசிடம் போராடி தமிழக மக்களுக்கு ஜெயலலிதா நிதி பெற்றுத்தரவேண்டியது தானே. அவர் ஏமாற்றுவதை நினைத்து எனக்கு வயிறு எரிகிறது. ஒருமுறை மக்கள் நன்மைக்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டேன். அது எனக்கு சரியான பாடம் கற்பித்தது. கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கினால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு குறைந்துவிடும் என்று கூறுவது மக்களை ஏமாற்றுவதாகும். மணல் கொள்ளையை தடுப்பதுபோல் நடிக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. போலீசாரிடமே கத்தியைக்காட்டி மிரட்டி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஜெயலலிதா ஆதங்கமாக பேசுகிறார். நான் அவரிடம் பயப்படமாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். அப்படியே வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும், சட்டமன்ற தேர்தலில் மாநாடு நடத்தி கருத்து கேட்டது போல உங்களிடம்(தொண்டர்களிடம்) கருத்து கேட்டு நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook