தேவையில்லாமல் பகட்டாக திரிந்தால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. ஏகப்பட்ட நகைகளை அணிந்தால் அது பலரின் கண்ணையும் உறுத்தும். உறவினர்களும் விதி விலக்கல்ல. சிலர் பொறாமைப்படுவார்கள். இதனால் பிரச்னையில்லை. ஆனால் வேறு சிலர் நகைகளை கொள்ளையடித்தால் என்ன என திட்டமிடுவார்கள். அப்படித்தான் திருச்சியில் நடந்தது. உறவினர் ஒருவரே தனது சித்தியையும் அவரது தாய், மகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்து கொள்ளையடித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் மைமூன் பீவி. மகள் சாயினாபானு. மைமூன் தாய் ஆயிஷா கனியுடன் வசித்து வந்தார். வேங்கடத்தனூரில் உள்ள தனது மாமியார் மதர்ஷாவை பார்க்க மைமூன் பீவி, தாய் ஆயிஷா கனி, குழந்தை சாயினா பானுவுடன் கடந்த 7ம் தேதி சென்றார். அன்று மாலையே அங்கிருந்து திரும்பியவர் வீடு வந்து சேரவில்லை. 3 பேரும் பொது கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக போலீசார், மைமூன் பீவியின் உறவினர் மகன் ஜமாலுதீன், அவரது தம்பி முகமது ரபீக், இவர்களது நண்பர்கள் மணிகண்டன், தினகரன் ஆகியோரை கைது செய்தனர். முகமது ரபீக்கும், தினகரனும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள். போலீசாரிடம் ஜமாலுதீன் அளித்த வாக்குமூலத்தில், செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். சித்தி மைமூன் பீவி அதிகளவில் நகை அணிந்திருப்பார். அவரை ஏமாற்றி நகைகளை பறிக்க 4 பேரும் திட்டமிட்டோம். மைமூன் பீவி, தனது தாய் மற்றும் குழந்தையுடன் ஊருக்கு வந்தார். அவர்களை ஊரில் விட்டு விடுவதாக கூறி எங்கள் ஆம்னி வேனில் ஏற்றிக் கொண்டோம். பெருமாள்மலை அடிவாரத்தை தாண்டியவுடன், நானும் நண்பர்களும் மைமூன் பீவி, ஆயிஷா கனி, குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றோம். அவர்கள் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டோம். நகைகளை மணி என்பவரிடம் கொடுத்து, புதைத்து வைக்க ஏற்பாடு செய்தோம். சடலங்களை கிணற்றில் போட்டுவிட்டு சென்றுவிட்டோம் என கூறியுள்ளார். 4 பேரையும் போலீசார், கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மணியை தேடிவருகின்றனர். எவ்வளவுதான் பணம் இருந்தாலும் யார் கண்ணையும் உறுத்தாத அளவுக்கு எளிமையாக வாழ்வதுதான் புத்திசாலித்தனம். இல்லாவிட்டால் உடமைக்கும் ஆபத்து, அதைத் தடுத்தால் உயிருக்கும் ஆபத்தாகி விடும்.