டெல்லி பலாத்கார சம்பவத்தால் அப்சல்குரு விவகாரத்தில் முடிவு எடுக்க நேரமில்லை : உள்துறை அமைச்சர் பேட்டி
புதுடெல்லி: டெல்லி பலாத்கார சம்பவத்தில் பிசியாக இருப்பதால் அப்சல் குரு கருணை மனு மீது முடிவு எடுக்க நேரம் கிடைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த நவம்பர் மாதம் தூக்கிலிடப்பட்டான். மிகவும் ரகசியமாக இவனது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அப்போது பேட்டி அளித்தார். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள அப்சல் குருவின் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அப்சல் குரு கருணை மனு ஜனாதிபதியிடம் இருப்பதாகவும், தன்னிடம் வந்த 48 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அப்போது அவர் உறுதி அளித்தார். இந்நிலையில் சுஷில்குமார் ஷிண்டே நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அப்சல் குரு தூக்கு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அப்சலின் கருணை மனு கடந்த மாதமே உள்துறை அமைச்சகத்துக்கு வந்து விட்டதை நிருபர்கள் சுட்டிக் காட்டினர். டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற வன்முறைகள் மற்றும் அது தொடர்பான பிரச்னைகளில் பிசியாக இருந்துவிட்டதாகவும், அதன் காரணமாக அப்சல் குரு கருணை மனு மீது முடிவு எடுக்க நேரம் கிடைக்கவில்லை எனவும் பதில் அளித்தார். அப்சல் கருணை மீது விரைவில் முடிவு எடுக்கப்படும். ஆனால் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இரண்டாவது முறையாக இந்த மனு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆழமாக சிந்தித்து இதில் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.