காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன் : மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை: ஒரு வாரத்துக்குள் காதலிப்பது பற்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வெங்கல் அருகே உள்ள ஆயலூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவி, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவார். பள்ளி முடிந்து நேற்று மாலை சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். அப்போது ஆயலூர் பகுதியை சேர்ந்த சுவீத்குமார் (21) மாணவியை மறித்து கிண்டல் செய்துள்ளார். பின் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். ‘‘இன்னும் ஒரு வாரம் டைம் தருகிறேன். இதற்குள் நல்ல முடிவா எடு. இல்லாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன மாணவி, பெற்றோரிடம் சொல்லிவிட்டார். வெங்கல் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, சுவீத்குமாரை கைது செய்தனர். திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.