ஸ்ரீபெரும்புதூரில் அடுத்தடுத்து 3 பெண்கள் மாயம் கடத்தலா? போலீஸ் விசாரணை
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் அடுத்தடுத்து 3 பெண்கள் மாயமானதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்களை யாராவது கடத்தினார்களா என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் மகள் துர்காதேவி (20). ஆசிரியை பயிற்சி முடித்துள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி கடைக்கு சென்ற துர்காதேவி, வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த துர்காதேவி, அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி மகள் மீனாட்சி (17). சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். கடந்த 29ம் தேதி பள்ளி விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
மறுநாள் தோழிகளை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற மீனாட்சி, வீடு திரும்பவில்லை. அரியலூர் மாவட்டம் திருவெம்புதூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் மகள் இந்துமதி (20). ஸ்ரீபெரும்புதூரில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4ம் தேதி சொந்த ஊருக்கு சென்றார். இதற்கான தகவலை தந்தைக்கும் தெரிவித்திருந்தார் இந்துமதி. ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. கம்பெனிக்கும் வரவில்லை. உடனே மனோகரன், ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து விசாரித்து பார்த்தார். எந்த தகவலும் இல்லை. இந்த 3 சம்பவங்கள் குறித்தும் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை யாராவது கடத்தி சென்றார்களா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து பெண்கள் காணாமல் போவது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ப¦தியை ஏற்படுத்தி உள்ளது.