கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, நந்திவரத்தில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலை 18 கி.மீ தூரம் உள்ளது. இந்த சாலை மாநில ஊரக நெடுஞ்சாலைக்கு சொந்தமானது. இது ஐந்து ஆண்டுக்கு முன்பு குறுகலான சாலையாக இருந்தது. இதனால் அடிக்கடி விபத்து நடந்தது. இரண்டு ஆண்டுக்கு முன்பு சாலை அகலப்படுத்த தீர்மானித்து ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் இருந்து மேலூர், கல்வாய், அஸ்தினாபுரம், பாண்டூர், அண்ணா நகர், கன்னிவாக்கம் வரை தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் காயரம்பேடு முதல் மூலக்கழனி, பெருமாட்டு நல்லூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி வரை உள்ள சாலை பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்த சாலையில் அரசு பஸ், கனரக லாரிகள் செல்வதால் இச்சாலை மிகவும் மோசமாகி விட்டது. கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதியில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து இருப்பதால் சாலை குறுகி விட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில்தான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர்கள் அவதிப்படுகின்றனர். குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. பொதுமக்களும் சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியவதில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது பற்றி உயர் அதிகாரிதான் முடிவு செய்ய வேண்டும். நபார்டு வங்கி நிதி உதவி கிடைத்ததும் கூடுவாஞ்சேரியில் இருந்து காயரம்பேடு வரை 5 கி.மீ. சாலை சீரமைக்கப்படும் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook