லஞ்சம் வாங்கிய அதிகாரி சிறையிலடைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கீழ 3ம் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அப்பகுதியில் வணிக வளாகம் கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கேட்டு சில வாரங்களுக்கு முன் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த வணிக வளாகத்திற்கு மின் இணைப்பு கொடுக்க உதவி செயற்பொறியாளர் கருப்பையா (54), தியாகராஜனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் தியாகராஜன் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி நேற்று மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற தியாகராஜன், அங்கு இருந்த கருப்பையாவிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ரத்தினவேல் மற்றும் போலீசார் கருப்பையாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.