திருவள்ளூர்: தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் கிராமங்களில் ஏரிகால்வாய் தூர்வாருவது, ஏரிக்கரையை பலப்படுத்துவது உள்ளிட்ட 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு குழுவிற்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, குழு ஒரு நாளைக்கு 240 மீட்டர் தூரத்துக்கு பணி செய்ய வேண்டும். குறைவான ஆட்கள் வந்தாலும் 240 மீட்டர் தூர பணியை செய்யவேண்டும். ஒரு நபருக்கு தினமும் ரூ.132 கூலி வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இ
ந்த நிலையில் பணி நடக்கும் இடங்களுக்கு சென்று அளவீடு செய்யாமல் இஷ்டம்போல் குறைவான சம்பளம் வழங்குவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள். ஒரு நாள் வேலைக்கு 60 ரூபாய் அல்லது 70 ரூபாய் வழங்குகின்றனர். 20 பேர் குழுவில் இருவர், மூன்றுபேர் விடுமுறை எடுத்தாலும் 240 மீட்டர் தூர பணியை முடித்தே தீர வேண்டும் என்ற கண்டிப்பு உள்ளது. இதனால் பணிச்சுமையால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசு நிர்ணயித்த கூலியை வழங்கக்கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடத்தியும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதனால் சரிவர பணிக்கு செல்லாமல் 100 நாள் வேலை திட்ட பணியை புறக்கணித்து வருகின்றனர். இதன் காரணமாக கிராமங்களில் பணி பாதியில் நிற்கிறது.
நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், முறையாக கூலி வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி மேற்பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று பூந்தமல்லி ஒன்றியம் ஜமீன்கொரட்டூர் ஊராட்சியில் அதிகாரிகளை கண்டித்து யாரும் பணிக்கு செல்லவில்லை. திருவள்ளூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதேபோல் பணி புறக்கணிப்பு, போராட்டம் நடக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குனர் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி அரசு நிர்ணயித்த கூலியை வழங்க நடவடிக்கை எடுப்பார்களா என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook