மினி லாரி மீது டிரைலர் மோதியது : செல்போன் கம்பெனி ஊழியர்கள் 7 பேர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூர்: மினி லாரி மீது டிரைலர் லாரி மோதியதில் செல்போன் கம்பெனி ஊழியர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே இன்று காலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே தாமல் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (27), முரளி (26), ராமு (25), பாஸ்கரன் (26), வெங்கடேசன் (24), தயாளன் (25), அருள் (26) ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் செல்போன் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். இன்று காலை 9.30 மணியளவில் வேலைக்கு போக 7 பேரும் பனப்பாக்கம் கூட்டு சாலையில் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக மினி லாரியில் லிப்ட் கேட்டு ஏறினர் சென்னைபெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக மாம்பாக்கம் அருகே வரும்போது டிரைலர் லாரி எதிர்பாராதவிதமாக மினிலாரியின் பின் பகுதியில் மோதியது.
இதில் டிரைலர் லாரி பள்ளத்தில் இறங்கியது. மினிலாரியில் இருந்த பூபாலன், முரளி உள்பட 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கஜேந்திர குமார், இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தோரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.