கடலூர்: ஓய்வு பெற்ற 5 சப்இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய தொகை ரூ. 14,42,500 கையாடல் செய்தது தொடர்பாக ஏட்டுவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மற்றொரு ஏட்டுவை தேடிவருகின்றனர். கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர்கள் கடலூர் மாசிலாமணி, தர்மலிங்கம், சிதம்பரம் செல்வராஜ், நெய்வேலி கண்ணாயிரம், அமிர்தலிங்கம் உள்பட 5 பேருக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய தொகை இது நாள் வரை வழங்கப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்பட வேண்டியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்ததில் பணம் வழங்கப்பட்டு விட்டதாக ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாவட்ட எஸ்பி ராதிகாவிடம் புகார் மனு அளித்தனர். விசாரணையில் ஓய்வூதிய தொகையை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட கருவூல அலுவலர் சம்பத்குமார் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மாவட்ட காவல் அலுவலத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் ஏட்டு செந்தில்குமார் ஓய்வு எஸ்.ஐ.க்கள் 5 பேரின் ஓய்வூதிய பணத்தை கையாடல் செய்ததும், நண்பரும் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் முரளியின் வங்கி கணக்கில் ரூ.14,42,500 செலுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
ஏட்டுகள் செந்தில்குமார், முரளி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஏட்டு முரளி (30) கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட முரளி கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மஞ்சக்குப்பம் வங்கி கணக்கில் இருந்து ஏட்டு முரளிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் காவல்துறையில் ஓய்வு பெற்ற போலீசார் பலருக்கு இது போன்று கிராஜுவிட்டி உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கப்பெறாமல் உள்ளதாக புகார்கள் குவிந்துள்ளன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook