சின்ன பிரச்னையில் இருந்து தப்பிக்க நினைத்து செய்யும் காரியத்தால் சில நேரங்களில் பெரிய பிரச்னைகளில் சிக்கிக் கொள்வோம். இது எல்லோருக்கும் எப் போதாவது நடப்பதுதான். சின்ன பிரச்னை மறைந்துவிடும். ஆனால் பெரிய பிரச்னை கழுத்தை நெறிக்கும். அப்படித்தான் பரீட்சையில் குறைந்த மார்க் வாங்கிய தோழிகள், விஷம் குடித்து மயங்கி விழுந்து பெற்றோர் கோபத்தில் இருந்து தப்பித்து விடலாம் என நினைத்துள்ளனர். ஆனால் விளையாட்டு விபரீதமாகி விட் டது. 2 மாணவிகளுமே இறந்து விட்டனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். மகள் கார்த்திகா. 9ம் வகுப்பு மாணவி. சின்னசாமி மகள் பாரதி, 8ம் வகுப்பு மாணவி. நெருங்கிய தோழிகள். இவர்களின் மற்றொரு தோழி மான்விழி.
இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மூவரும் இணை பிரியா தோழிகள். 4 நாட்களுக்கு முன்பு மான்விழி படித்து வந்த பள்ளியில் பரீட்சை பேப்பர் வழங்கப்பட்டுள்ளது. இதில், அவர் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் கண்டிப்பார்களே என்று கருதி, அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பெற்றோர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப் பாற்றினர். இதனிடையே, கார்த்திகா, பாரதி படிக்கும் தனியார் பள்ளியிலும் பரீட்சை பேப்பர் வழங்கப்பட்டுள்ளது. இதில், இருவரும் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளனர். பெற்றோர்கள் கண்டிப்பார்களே என பயந்த மாணவிகள், மான்விழி போல விஷம் குடித்துவிட்டால் பெற்றோர்கள் மீட்டு காப்பாற்றி விடுவார்கள். இந்த பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.
விளையாட்டாக இருவரும் அங்குள்ள மாரியம்மன் கோயில் திண்ணையில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தனர். இரவு 8 மணிக்கு அந்த வழியாக சென்றவர்கள், மாணவிகள் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். திடுக்கிட்ட பெற்றோர்கள் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் கார்த்திகா இறந்துவிட்டார். உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பாரதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார். தேர்வு பயம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒருமுறை பெயிலானால் ஒன்றும் ஆகி விடாது. ஆனால் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பயந்து நடுங்கி சாகிறார் கள் மாணவர்கள். இதனால்தான் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.