கடல் சீற்றத்தால் ஷூட்டிங் பாதிப்பு
சென்னை: கடல் சீற்றத்தால் ஷூட்டிங் தாமதமாகிறது என்றார் இயக்குனர். மீனவர்களின் பிரச்னைகளை சொல்லும் படமாக உருவாகிறது ‘வங்கக் கரை’. எழுதி, இயக்கி, தயாரிப்பதுடன் ஹீரோவாக நடிக்கிறார் கே.டி.முருகன். அவர் கூறியதாவது: காலம்காலமாக மீனவர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் தங்கள் தொழிலை விட்டு விலகியதில்லை. அதுபோல் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் தொடர்கதையாகவே இருக்கிறது. வறுமை முதல் உயிர் பலி வரை பல ரூபங்களில் பிரச்னைகள் வருகிறது. இதில் அரசியல், சாதி, காதல் போன்றவைகளும் குறுக்கிடுகின்றன.
பல்வேறு நிகழ்வுகளை தோலுரித்து காட்டும் வகையில் கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்து முடிந்தது. நடுக்கடல் காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீற்றம் குறைந்ததும் அக்காட்சிகள் படமாகும். இதுவரை உதவி இயக்குனராக யாரிடமும் பணியாற்றாவிட்டாலும் மெசேஜுடன் காதல் கலந்த கமர்ஷியல் படமாக இதை உருவாக்குகிறேன். ஜோதிஷா, சைனு, கிரேசி, காதல் சுகுமார், உடுமலை ரவி, கார்த்திக் உள்பட பலர் நடிக்கின்றனர். அன்பரசு இசை. செல்வமணி எடிட்டிங். இவ்வாறு இயக்குனர் முருகன் கூறினார்.