புதுச்சேரி: புதுவை மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இன்ஜினியரிங் மாணவன், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். நண்பருக்கு விருந்தாக்கிய கொடூரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதுவை மாநிலம் திருபுவனை அடுத்த கொத்தபுரி நத்தத்தில் வசிப்பவர் நாகராஜ். தனியார் நிறுவனத்தில் காவலாளி. இவரது மகள் காவியா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ் 2 படித்து வருகிறார். புத்தாண்டு தினத்தன்று டியூஷன் சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால், திருபுவனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் நேற்று காலை பெற்றோருக்கு போன் செய்த மாணவி, விழுப்புரத்தில் இருப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். உடனே உறவினர்கள் விழுப்புரம் சென்றனர்.
அங்கு பஸ் நிலையத்தில் மயக்க நிலையில் இருந்த மாணவியை மீட்டு புதுவை அழைத்து வந்து ராஜீவ் காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்து டிஐஜி சுக்லா, எஸ்பி தமிழரசி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருபுவனை போலீசார், திருவெண்ணெய்நல்லூர் காந்தி குப்பத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் முத்து, மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். திருவெண்ணை நல்லூர் விரைந்த புதுவை தனிப்படை போலீசார் தமிழக போலீஸ் டிஎஸ்பி பாண்டியன், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஆகியோர் உதவியுடன் கண்டக்டர் முத்து, அவரது நண்பர் வெங்கடாஜலபதி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது: வில்லியனூர் லூர்து அன்னை மாதா கோயிலுக்கு வந்த காவியாவை, முத்து பின் தொடர்ந்து வந்துள்ளார். காவியாவின் தாய்க்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அழைத்து வந்தார்.
பஸ்சில் காவியாவின் வாயை பொத்தியதால் மயக்கமடைந்திருக்கிறார். பின்னர் அவரை திருவெண்ணெய்நல்லூர் அழைத்து சென்று, அங்கு தனது நண்பருக்கு சொந்தமான ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குடிசை வீட்டில் கண்டக்டர் முத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது நண்பரும் கூரை வீட்டுக்கு சொந்தகாரருமான அரசூரில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வரும் வெங்கடாஜலபதிக்கு பலவந்தமாக விருந்தாக்கியது தெரிய வந்தது. மேலும் பள்ளி தென்னல் கிராமத்தை சேர்ந்த மேலும் ஒருவர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். அவரும் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட முத்துவுக்கு 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. பாலியல் வன்கொடுமையால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை விழுப்புரம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை தீக்குளிக்க முயற்சி
மாணவி காவியாவுக்கு மயக்கம் தெளிந்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாணவியிடம் கெடுபிடி விசாரணை நடத்தி வழக்கை திசை திருப்ப போலீசார் முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை வெளிப்புற வாயில் அருகே மாணவியின் தந்தை நாகராஜ், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பணியில் இருந்த காவலர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் போராட்டம்
மாணவியை பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் அடையாள அட்டை அணிந்து இருக்க வேண்டும். தனியார் பஸ்சின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் விழுப்புரம்புதுச்சேரி சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் தாகூர் கலை கல்லூரி, சமுதாய கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இந்திரா காந்தி அரசு கலை கல்லூரி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாலிடெக்னிக் மாணவிகள் அங்கிருந்து ஊர்வலமாக அரசு மகளிர் மருத்துவமனை வந்தனர். அங்கு சம்பவத்தை கண்டித்து கோஷமிட்டனர். விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நாளை போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook