வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர் ஒருவருடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக கணவனுக்கு சந்தேகம். வேலைக்கு போகாதே என்றிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம். மோதல் முற்றியதில், மனைவியின் தலையை சுவரில் மோதி கொலை செய்துவிட்டார் கணவர். செங்கல்பட்டு அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (எ) ஜான்சன் (30). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் டெப்போவில் கண்டக்டர். இவருக்கும் செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலத்தை சேர்ந்த ஜோஸ்வின் (எ) அருள்மொழிக்கும் (27) கடந்த ஆகஸ்டில் திருமணம் நடந்தது. தம்பதியர் செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் சாய்நகரில் வசித்து வந்தனர். ஜோஸ்வினின் அப்பா ஆதிகேசவன், அம்மா மேரியம்மாள் அதே பகுதியில் மளிகை கடை நடத்துகின்றனர்.
அவர்களும் புதுமண தம்பதியுடன் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கடையை மூடிவிட்டு அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தனர். கதவு பூட்டியிருந்தது. வெகுநேரம் தட்டியும் திறக்கவில்லை. மகள் எங்காவது சென்றிருப்பாள் என நினைத்து வாசலில் காத்திருந்தனர். 10 மணிக்கு மேல் ஆகியும் மகள் வரவில்லை. மருமகனையும் காணவில்லை. போனில் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த ஆதிகேசவன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கை அறையில் ஜோஸ்வின் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் வந்து விசாரித்தனர். பி.பார்ம் படித்திருக்கும் ஜோஸ்வின் மறைமலைநகரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.
திருமணத்துக்காக லீவு போட்டிருந்த அவர் ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு சென்றிருக்கிறார். கடையில் வேலை பார்க்கும் ஒருவருடன் மனைவிக்கு பழக்கம் இருப்பதாக சந்தேகமடைந்த சரவணன், மனைவியை வேலைக்கு போக வேண்டாம் என கூறியிருக்கிறார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. ஒன்றரை மாதமாக இருவரும் வேலைக்கு போகவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில்தான் கொலை நடந்திருக்கிறது என்கிறது போலீஸ் தரப்பு. 3 தனிப்படைகள் சேர்ந்து அரசு பஸ் கண்டக்டர் சரவணனை தேடி வருகிறது. கள்ள தொடர்பு சம்பவங்கள் ஒன்றிரண்டு நடந்தாலும், வேலைக்கு போகும் எல்லா பெண்களையும் சந்தேக கண் கொண்டு பார்ப்பது கேவலம், அநியாயம். சந்தேகமே வந்தாலும் அதை தீர்க்க எத்தனையோ வழிகள் இருக்க, கொலை வரை போனது மன்னிக்க முடியாத குற்றம்.