2013-ம் ஆண்டு ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும் என்கிறது புத்தாண்டு பலன்கள். மழையின்றி விவசாயம் பாதிக்கும், இயற்கை சீற்றம் ஏற்படும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயரும் என்றெல்லாம் புத்தாண்டின் பொதுப் பலன்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவெல்லாம் நடந்துவிடும் என்பதை உறுதிப்படுத்துவதுபோல இப்போதே செய்திகள் வரத் தொடங்கி விட்டன. டீசல் விலை ரூ.10 வரை கூடும் என்பது மக்களுக்கு அதிர்ச்சியான தகவல்தான்.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெட்ரோலிய நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை பாதிக்கக் கூடிய டீசல், மண்ணெண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மட்டும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவை இரண்டும் மானிய விலையில் விற்கப்படுவதால், அரசுக்கு கடும் நிதி தட்டுப்பாடு ஏற்படுகிறதாம். இந்த ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதை சரிக்கட்ட, டீசல் விலையை லிட்டருக்கு மாதம்தோறும் ரூ.1 என்ற வீதத்தில் உயர்த்தலாம் என பெட்ரோலியத்துறை திட்டமிட்டுள்ளது. இப்படி செய்தால் அடுத்த 10 மாதங்களுக்குள் டீசல் லிட்டருக்கு ரூ.10 உயர்ந்துவிடும். மண்ªண்ணெய் விலையும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இதே அளவு உயர்த்தப்படும் என்று தெரிகிறது. தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமரும், ‘நமது நாட்டில் பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு போன்றவற்றின் விலை மிகவும் குறைவாக உள்ளது. சர்வதேச விலைக்கும் நமது விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சரி செய்ய படிப்படியாக விலையை உயர்த்த வேண்டும்’ என்று கூறிவிட்டார். ‘எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.9.28 நஷ்டம் ஏற்படுகிறது. டீசல் விலையை மாதம் 1 ரூபாய் வீதம் உயர்த்தினால் 10 மாதத்தில் இந்த நஷ்டம் முழுவதும் சமாளிக்கப்படும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், வரும் மாதத்திலேயே விலை உயர்வு அமலுக்கு வரும்’ என்கிறார் பெட்ரோலியத்துறை உயரதிகாரி ஒருவர்.
புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் மக்கள், தங்கள் தலையில் விழப்போகும் இந்த விலை உயர்வு இடியையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சொல்லி, விலைவாசியை உயர்த்தும் அரசுகள், அதை சுமப்பதால் மக்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை நினைத்து பார்ப்பார்களா.. விலை உயர்வுக்கு ஏற்ப அவர்களின் வருவாய் உயரவும் நடவடிக்கை எடுத்தால் நல்லது.