கோபம் போன்ற கொடிய வியாதி எதுவும் இல்லை. நமது கோபத்தால் எதிராளிக்கு எவ்வளவு பாதிப்போ அதுபோல் இரண்டு மடங்கு பாதிப்பு நமக்கு ஏற்படும். ஆனால் பலருக்கு இது தெரியாது. கண நேர கோபத்தால் வாழ்க்கையே மாறியிருக்கிறது பலருக்கு. அந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள் எதுவுமே சரியானதாக இருக்காது. அதனால்தான் உணர்ச்சி வசப்பட்டு இருக்கும்போது எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்பார்கள் பெரியோர்கள். மனைவியுடன் சண்டை போட்டவர் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து விட்டார். அந்த நேரம் பார்த்து ரயில் வர, பின்தொடர்ந்து வந்த மனைவி கண்ணெதிரில் பரிதாபமாக தலை துண்டித்து இறந்து போய் விட்டார் கணவர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாபுராவ். சித்தாள் வேலை செய்து வந்தார். மனைவி கார்த்திகா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். பாபுராவ், சரியாக வேலைக்கு செல்வதில்லை. குடும்பம் வறுமையில் தவித்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் நேற்று கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார் பாபுராவ். அவரை பின்தொடர்ந்து சென்றார் கார்த்திகா. இவர்களது வீட்டின் அருகே தண்டவாளம் உள்ளது. வேகமாக சென்ற அவர், தண்டவாளத்தில் தலையை வைத்தார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த மின்சார ரயில், பாபுராவ் மீது ஏறி இறங்கியது. தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாபுராவ் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் கார்த்திகா அதிர்ச்சியடைந்து கதறினார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். அப்பகுதி மக்கள் ஓடி வந்து, கார்த்திகாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பேசித் தீர்க்க முடியாத பிரச்னையே கிடையாது. பிரச்னைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதை முதலில் சரிப்படுத்த வேண்டும். உன்னால் தான் பிரச்னை என கணவனும் மனைவியும¢ மாறிமாறி புகார் கூறி சண்டை போடுவதில் அர்த்தமில்லை. யாராவது ஒருவர் இறங்கி வந்து, சரி விடு, இனிமேல் பிரச்னை இல்லாமல் வாழலாம் என சண்டையை முடித்தால் வாழ்க்கை இனிக்கும்.