ஐதராபாத்: நிலம் புயலால் ஆந்திராவில் 44 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார். அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான நிலம் புயல் சென்னை அருகே மாமல்லபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரையை கடந்தது. பின்னர் வலுவிழந்து ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவை நோக்கி நகர்ந்தது. இதனால் ஆந்திராவின் அனந்தபூர், பிரகாசம், கிழக்கு கோதவரி, நெல்லூர், கம்மம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயல், மழை பாதிப்பு குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்ப¤ரன்சிங்கில் பேசினார். இதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறபட்டிருப்பதாவது: ஆந்திராவில் நிலம் புயலால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசியும் 5 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்படும். வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும், கால்நடைகளை இழந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.