கொடுங்கையூரில் சோகம் : கிரைண்டரில் ஷாக், சிறுமி பரிதாப பலி
பெரம்பூர்: வீட்டில் மாவு அரைக்கும் போது கிரைண்டரில் ஷாக் அடித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். கொடுங்கையூரில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார். அட்டை கம்பெனி ஊழியர். இவரது மகள் அபிநயா (8). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்றிரவு அபிநயாவின் அம்மா வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அவர் சமையல் அறைக்கு சென்றபோது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அபிநயா மாவு சாப்பிடும் ஆசையில் கிரைண்டரில் கையை விட்டு மாவு எடுத்திருக்கிறாள். இதில் மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டாள். அவரது அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து அம்மா பதறியடித்து ஓடி வந்தார். பக்கத்து வீட்டினர் திரண்டனர். மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அபிநயா பரிதாபமாக இறந்தாள். புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.