மதுவிலக்கை வலியுறுத்தி 6ம் தேதி ஆர்ப்பாட்டம் : வைகோ பங்கேற்பு
சென்னை: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள் 6ம் தேதி ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட அனைத்து கொடுமைகளுக்கும் மதுக்கடைகளே காரணம். எனவேதான், முழுமையான மது விலக்கை அமல்படுத்த கோரி, முதல் கட்டமாக கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 6ம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மூன்றாம் கட்டமாக நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து டிசம்பர் 12ம் தேதி நடை பயணம் புறப்பட்டு டிச.25ல் மதுரையில் முடிவடையும். தென் சென்னை, வட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே எனது தலைமையில் 6ம் தேதி காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.