ஸ்டான்லியில் மேலும் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது
தண்டையார்பேட்டை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு திறந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 40 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு நேற்று கிடைத்தது. இதில் 14 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து தற்போது 25 பேர் டெங்கு வார்டில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.