செங்கல்பட்டு: தொடர் மின்தடையை கண்டித்து கிராம மக்கள் மின்வாரியத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சிங்கப்பெருமாள்கோவில் அருகே இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம்பாக்கம், பாரேரி, திருத்தேரி, சத்தியா நகர் உள்ளிட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் வினியோகம் இல்லை. இதனால் பல்வேறு பணிகள் முடங்கியது. இரவில் தூக்கம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை. மின்வாரிய அலுவலக போன் செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்கப்பெருமாள்கோவில் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் மின்தடை குறித்து கேட்டபோது அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் அலுவலத்தில் இருந்த போனை உடைத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து மக்கள் சிங்கப்பெருமாள்கோவில் சென்னை , திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள், வாகனங்கள், சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கியது. அதேபோல் சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலை திருக்கச்சூர் வரை 6 கிலோ மீட்டர், அனுமந்தபுரம் சாலை தென்மேல் பாக்கம் வரை வாகனங்கள் வரிசையாக நின்றது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகைவேல், மறைமலை நகர் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வந்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் கருணா, உதவி செயற்பொறியாளர் சாமிநாதன், உதவி பொறியாளர் நாகராஜன் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டிரான்ஸ்பார்மர் பழுதானதால் தவிர்க்க முடியாத காரணத்தால் மின்தடை ஏற்பட்டது. இன்னும் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook