சென்னை: வினாத்தாள் வெளியானதால் ரத்தான குரூப் 2 தேர்வு இன்று மீண்டும் நடந்தது. இத்தேர்வை சுமார் 6.5 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,687 பேரை தேர்வு செய்ய (குரூப் 2) எழுத்து தேர்வு அறிவித்தது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 13ம் தேதி வெளியானது. சார் பதிவாளர் (52), நகராட்சி ஆணையர் (14), உதவி பிரிவு அலுவலர் (12), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (3), முதுநிலை ஆய்வாளர் (181), கண்காணிப்பாளர்/இளநிலை கண்காணிப்பாளர் (162), இளநிலை கூட்டுறவு தணிக்கையர் (229), வருவாய் உதவியாளர் (380) உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி நடந்தது. தேர்வின் போது, வினாத்தாள் வெளியானதை தொடர்ந்து குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நவம்பர் 4ம் தேதி மறு தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி ரத்து செய்யப்பட்ட தேர்வு இன்று மீண்டும் நடந்தது. பொது அறிவு மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கில தாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. குரூப் 7ல் இந்து மதம் பற்றிய (சைவம் மற்றும் வைணவம்) தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடந்தது. மொத்தம் 6.5 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதினர். 2 தேர்வுகளையும் ஒரே தேர்வு கூடத்தில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் 3,456 தேர்வு கூடங்களில் நடந்தது. சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளி, மயிலாப்பூர் பிஎஸ் மேல்நிலை பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, டவுட்டன் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட 290 பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடந்தது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தேர்வு நடக்கும் மையங்கள் வீடியோ கேமரா மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்வு பணி மற்றும் பறக்கும் படை பணியில் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்Õ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook