வாஷிங்டன்: அமெரிக்காவில் இனவெறியை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். லூதர் கிங், எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்ற தலைப்பில் கடந்த 1963ம் ஆண்டு நிகழ்த்திய உரை வரலாற்றில் மிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர் களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க பல போராட்டங்களை நடத்தினார். மேலும், வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதை எதிர்த்து அகிம்சை வழியில் போராடினார். இதற்காக லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மார்ட்டின் லூதர் கிங், கடந்த 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, டென்னிசி மாகாணம் மெம்பிஸ் என்ற பகுதியில் உள்ள லோரைன் ஓட்டல் பால்கனியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை சுட்டுக் கொன்ற வெள்ளைக்கார நிறவெறியர் ஜேம்ஸ் ஏர்ல் ராய் என்பவருக்கு 99 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் கடந்த 1998ம் ஆண்டு தனது 70வது வயதில் மரணம் அடைந்தார். லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்ட பின், அந்த அறையில் யாரும் தங்கவில்லை. அதன்பின் அந்த ஓட்டல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. லூதர் கிங் தங்கிய 306ம் எண் அறையை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அருங்காட்சியக தகவல் ஒருங்கிணைப்பாளர் கோனி டைசன் கூறுகையில், லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்ட ஓட்டல் அறை, பொதுமக்கள் பார்வைக்கு நவம்பர் 19ம் தேதி முதல் திறக்கப்படும். அந்த அறையில் லூதர் கிங் பயன்படுத்திய டெலிபோன், படுக்கை, காபி கப் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்படும். லூதர் கிங் மறைவுக்கு பின் அந்த அறையில் தங்குவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த அறையை ஒரு கோயில் போல் பராமரித்து வருகிறோம் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook