அமெரிக்காவில் பயங்கரம் : 7 வயது மகனை 100 முறை கத்தியால் குத்திய கொடூர தாய்
வீட்டன்: ஆத்திரத்தில் 7 வயது மகனை 100 முறையும், 5 வயது மகளை 50 முறையும் கத்தியால் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சிகாகோ புறநகர் பகுதி நேப்பர்வல்லியில் வசிப்பவர் எல்ஸ்பீடா பிளாக்கோஸ்கா (40). இவருடைய கணவர் டிரக் டிரைவர். இவர்களுக்கு 7 வயதில் ஜஸ்டின் என்ற மகன், 5 வயதில் ஒலிவியா என்ற மகள் இருந்தனர். எல்ஸ்பீடாவின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்தார்.
மேலும், 2 குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அதிகரித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை பார்த்து எரிச்சலடைந்த எல்ஸ்பீடா, தனது மகனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜஸ்டின் பரிதாபமாக இறந்தான். அருகில் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த மகள் ஒலிவியாவையும் கத்தியால் குத்தி கொன்றார். பின்னர் இருவரின் கழுத்தையும் கத்தியால் அறுத்தார்.
இந்த கொடூர செயல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், எல்ஸ்பீடாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் கூறுகையில், மகனை 100 முறை எல்ஸ்பீடா கத்தியால் குத்தியுள்ளார். கண்ணால் பார்த்த சாட்சியாக மகள் இருக்க கூடாது என்பதற்காக அவளையும் 50 முறை கத்தியால் குத்தியுள்ளார் என்று வாதாடினார். விசாரணையின் போது ஆஜர்படுத்தப்பட்ட எல்ஸ்பீடா, கோர்ட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். இந்த சம்பவத்தால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.