வெங்கட்பிரபுவுடன் மோதல் இல்லை : ரிச்சா பேட்டி
சென்னை: இயக்குனர் வெங்கட்பிரபு படத்தில் இருந்து வெளியேறியதால் இருவருக்கும் மோதலா என்றதற்கு பதில் அளித்தார் ரிச்சா. ‘மயக்கம் என்ன?’ ‘ஒஸ்தி’ படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க முடிவானது. இந்நிலையில் திடீரென்று அப்படத்தில் இருந்து வெளியேறினார். இதுபற்றி ரிச்சா கூறியதாவது: பிரியாணி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்டேன். அதில் 3 ஹீரோயின்கள் நடிப்பது தெரிந்தது. அவர்களில் ஒருவராகத்தான் நான் நடிக்க கேட்டிருந்தார் வெங்கட்பிரபு. பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை என்னிடம் சொன்னார். அதில் என்னுடைய வேடமும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அது எனக்கு பிடிக்கவில்லை.
எனவே விலக முடிவு செய்தேன். இதுபற்றி நானும் வெங்கட்பிரபுவும் மனம்விட்டு பேசினோம். அப்போது குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இஷ்டமில்லை என்பதை தெரிவித்ததுடன் விலகி கொள்ள விரும்புவதையும் தெரிவித்தேன். என் முடிவை அவர் ஏற்றுக்கொண்டார். இன்னொரு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வரும்போது நடிப்பேன். தெலுங்கு படத்தில் கவனத்தை திருப்பிவிட்டீர்களா? என்கிறார்கள் தமிழ் படங்கள்தான் என்னை நடிகையாக அங்கீகரித்தது. ‘மயக்கம் என்ன’ படத்திற்காக 5 விருதுகளும். ‘ஒஸ்தி’ படத்திற்காக ஒரு விருதும் பெற்றேன். தமிழ் படங்கள் மீது எனக்கும். என் மீது அங்குள்ளவர்களுக்கும் அக்கறை இருக்கிறது. நல்ல கதைகள் வரும்போது நிச்சயம் ஏற்பேன். அதற்காக காத்திருப்பேன். இதற்கிடையில் 4 தெலுங்கு படங்களில் இப்போது நடித்து வருகிறேன்.