சட்டசபை வைர விழா பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
சென்னை: சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்து கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி 1952-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழக சட்டமன்ற பேரவை, இந்த ஆண்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து பேரவையின் வைர விழா, வரும் 30-ம் தேதி பேரவை மண்டபத்தில் வெகு விமரிசையாக நடக்க உள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 26-ம் தேதி டெல்லியில் சந்தித்து இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு அழைப்பு கடிதம் வழங்கினர். எனது அழைப்பை ஏற்று, சட்டமன்ற பேரவையின் வைர விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். வைர விழாவுக்கு தலைமை தாங்குமாறு கவர்னர் ரோசய்யாவை இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அவரும் தலைமை தாங்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, மாமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.