நொய்டாவில் கார் ரேஸ் போட்டி : 1.15 லட்சம் பீர் பாட்டில் விற்பனை
நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் கடந்த வாரம் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியின்போது 1 லட்சத்து 15 ஆயிரம் பீர் பாட்டில்கள் விற்பனையானதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லி அருகே உள்ள நொய்டாவில் கடந்த வாரம் 3 நாட்கள் பார்முலா ஒன் சர்வதேச கார் ரேஸ் போட்டிகள் நடைபெற்றன. பல நாடுகளைச் சேர்ந்த ரேஸ் கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரபல வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டி நடைபெறும் இடத்தில் மது பானங்கள் விற்க குறிப்பிட்ட சிலருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
3 நாட்களில் விற்பனையான மதுபான விவரங்களை நொய்டா வருவாய் அதிகாரி குல்தீப் யாதவ் நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்த ஆண்டு 1.15 லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு 50 ஆயிரம் பீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதன் வாயிலாக அரசுக்கு ரூ. 42 லட்சம் எக்சைஸ் டூட்டி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.16 லட்சம் கிடைத்தது. பிராந்தி, விஸ்கி பொறுத்தவரை 11 ஆயிரம் பாட்டில்கள் விற்பனையாயின. கடந்த ஆண்டு 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனையானதாக யாதவ் தெரிவித்துள்ளார்.