நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு : ஜனார்த்தன ரெட்டிக்கு ஐகோர்ட் ஜாமீன்
ஐதராபாத்: சுரங்க மோசடி வழக்கில் கைதாகி ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆந்திர ஐகோர்ட் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கர்நாடக சுற்றுலா துறை அமைச்சராக இருந்த ஜனார்த்தனரெட்டி கடந்த செப்டம்பர் மாதம் சுரங்க மோசடி புகாரில் சிக்கி சிபிஐயால் கைது செய்யப்பட்டு ஐதராபாத்தில் உள்ள சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனுக்களை சிபிஐ கோர்ட், ஆந்திர ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டி சிபிஐ கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பட்டாபிராமராவ் இந்த வழக்கை விசாரித்து ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினார். சிபிஐயின் கடும் எதிர்ப்பை மீறி ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சிபிஐ, நீதிபதி பட்டாபிராமராவ் மற்றும் அவரது குடும்பத்தாரை ரகசியமாக கண்காணித்தது. இதில் நீதிபதி பட்டாபிராமராவ் ஜனார்த்தன ரெட்டியின் உறவினர்களிடமிருந்து ரூ. 9.5 கோடி பெற்றுக் கொண்டு ஜாமீன் வழங்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஜனார்தன ரெட்டிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஐகோர்ட் ரத்து செய்தது.
லஞ்சம் வாங்கிய நீதிபதி பட்டாபிராமராவ் மற்றும் அவரது மகன் உள்பட 7 பேர் மீது ஆந்திர ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஜனார்த்தன ரெட்டியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கடந்த வாரம் ஊழல் தடுப்பு கோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஐகோர்ட் நேற்று விசாரித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது. லஞ்ச வழக்கில் கைதான அனைவரும் ஜாமீனில் வெளியே வந்திருப்பதை தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டிக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் சுரங்க மோசடி வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.