அடுத்த ஆண்டு ஏப்ரலில் பாக். பொது தேர்தல்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முடிகிறது. அந்நாட்டு சட்டப்படி, தேர்தலுக்கு முன்பாக தற்போதுள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலை கண்காணிக்கும் விதமாக இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட வேண்டும். இடைக்கால அரசு ஏற்படுத்தி 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்துக்கு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்கு வசதியாக தற்போதுள்ள நாடாளுமன்றம் ஜனவரி 16 அல்லது 17-ல் கலைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு இடைக்கால அரசு ஏற்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பும் இறுதி முடிவு எடுக்கிறார்கள். ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. பாகிஸ்தான் வரலாற்றில் ஜனநாயக முறைப்படி தேர்வான அரசாங்கம் முதல்முறையாக தனது முழு பதவிக்காலத்தை முடிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.