தீவிரவாதிகள் குண்டுவீச்சு சிறுவன் பரிதாப சாவு
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அசாமின் உதல்குரி நகரில் உள்ள மார்க்கெட்டுக்கு நேற்று மாலை மோட்டார் பைக்கில் 2 தீவிரவாதிகள் வந்தனர். மார்க்கெட்டில் கூட்டம் அதிகம் இருந்த பகுதியை நோக்கி கையெறி குண்டுகளை வீசி கொடூர தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் வீசிய குண்டுக்கு ஒரு சிறுவன் பலியானான். அவனது தந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் போடோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நேற்று மாலை, மாநிலத்தில் இன்னொரு தீவிரவாத தாக்குதலும் நடந்தது. நவ்கான் மாவட்டத்தில் உள்ள மொபைல் கம்பெனிக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.