மும்பை சிறையில் இருந்து 22 பெண் கைதிகள் எஸ்கேப்
மும்பை: மும்பை சிறையில் இருந்து 22 பெண் கைதிகள் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை புறநகர் பகுதியான மங்குர்டில் பெண்கள் சிறை உள்ளது. மும்பை முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு போலீஸ் சோதனைகளில் பிடிபட்ட பெண்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் குறைவான சிறை ஊழியர்களே பணியில் இருந்தனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தி, நேற்றிரவு சுவர் ஏறி குதித்து பெண்கள் தப்பினர். இதை பார்த்த சிறை பாதுகாவலர் அலாரத்தை ஒலிக்க செய்தார். பாதுகாவலர்கள் வருவதற்குள் 22 பெண்கள் தப்பிவிட்டனர். தப்புவதற்கு தயாராக இருந்த 13 பெண்களை காவலர்கள் மடக்கி பிடித்தனர். சிறையில் இருந்து தப்பிய பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சிறையில் இருந்து பெண்கள் தப்புவது இது 2-வது முறையாகும். கடந்த மாதம் 10-ம் தேதி சிலர் தப்பினர். அவர்கள் இன்னும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.