அமெரிக்காவில் விண்கற்கள் 1.74 கோடிக்கு ஏலம்
நியூயார்க்: அமெரிக்காவில் சந்திரனில் இருந்து விழுந்த அரிய விண்கற்கள் ஏலம் விடப்பட்டது. கடுமையான போட்டிக்கு இடையே 2 விண்கற்கள் ரூ.1.74 கோடிக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. விண்கற்கள் மிக அதிக விலைக்கு ஏலம் போனது இதுவே முதன்முறை என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. நியூயார்கில் உள்ள ‘ஹெரிடேஜ் ஆக்ஷன்’ என்ற நிறுவனம், இந்த இரண்டு கற்கள் உள்பட ஏராளமான விண்பொருட்களை ஏலம் விட்டது. இதில் நிலவில் இருந்து விழுந்த விண்கற்கள் மிக அதிக விலைக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. சூரிய குடும்பத்தை சேர்ந்த சுமார் 125 கற்களும் இந்த நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஏல நிறுவனத்தார் கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனம் விண்பொருட்களை அதிக அளவில் ஏலம் விடுவது வழக்கம். நிலவு கற்கள் ஏலம் குறித்து அறிவிப்பு செய்தோம். இந்த கற்களை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. அதிகபட்சமாக ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் போகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒரு கோடியே 74 லட்சத்துக்கு ஏலம் போனது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏலம் போன விண்கற்கள் நிலவில் இருந்து விழுந்தவை. ஒவ்வொன்றும் 907 கிராம் எடை கொண்டது’’ என்றனர். ஏலத்தில் கற்களை எடுத்தவர்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.