மனைவி உயிரோடு எரித்து கொலை : தற்கொலை நாடகமாடிய கணவன் கைது
திருப்பூர்: மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார். திருப்பூர், சூசையாபுரம் டி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் முத்துச்சாமி(32). ஆட்டோ டிரைவர். மனைவி மகேஸ்வரி(27). மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட முத்துசாமி, நேற்று முன்தினம் மண்ணெண்ணெயை எடுத்து மகேஸ்வரியின் உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். தீ உடலில் பரவியதையடுத்து மகேஸ்வரி சத்தமிட்டார்.
மகேஸ்வரியின் உடலில் தண்ணீரை எடுத்து ஊற்றிய முத்துசாமி இரவு மகேஸ்வரியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மகேஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக தெரிவித்தார். தனக்கும் கையில் காயம் ஏற்பட்டதாக கூறி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 90 சதவீதம் தீக்காயங்கள் இருந்ததால் மகேஸ்வரி மயக்கமான நிலையில் இருந்தார். நள்ளிரவு சுய நினைவுக்கு திரும்பினார். டாக்டர்கள் முன்னிலையில் போலீசாரிடம் மகேஸ்வரியிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘என் மீது சந்தேகப்பட்டு முத்துசாமி மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி தீ வைத்தார்.
பின்பு நல்லவர் போல தண்ணீரை எடுத்து என் மீது ஊற்றி, மருத்துவமனையில் சேர்த்தார். அவரை(முத்துசாமி) விட்டு விட வேண்டாம். அவரை விட்டால் தனது குழந்தைகளையும் கொன்று விடுவார்‘ என கூறியுள்ளார். இதன் அடிப்படையில், முத்துசாமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து முத்துசாமி மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.