தக்கலை: குமரி அருகே ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்ணை மின்தடை நேரத்தில் காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் உஷா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) அங்குள்ள செருப்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு 7.30க்கு பணி முடித்து மினி பஸ்சில் உஷா ஊருக்கு வந்தார். பஸ்சில் இருந்து இறங்கி இரவு 8 மணியளவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் சாலை முழுவதும் இருட்டாக இருந்தது. திடீரென சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்த இரண்டு பேர் இறங்கி உஷாவை வழி மறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவரை காரில் கடத்தி சென்றனர்.
காரில் டிரைவருடன் சேர்த்து 3 பேர் இருந்தனர். தக்கலை மருந்து கோட்டையை கடந்து சானல் கரை ஓரமாக காரை கொண்டு சென்றனர். காரில் இருந்து உஷாவை கீழே இறக்கினர். காரில் இருந்து இறங்கியதும், உஷா தப்பி ஓடினார். ஆனால் அவரை விடாமல் துரத்தினர். இரவு வேளை என்பதால் ஆள் நடமாட்டமும் இல்லை. சிறிது தூரம் ஓடி சென்றதில், கீழே விழுந்து உஷா படுகாயம் அடைந் தார். அவரை 3 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து மறைவான இடத்துக்கு கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் ஆட்டோவில் மேலும் ஒரு வாலிபர் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் நால் வரும் சேர்ந்து, கத்தியைக் காட்டி மிரட்டி மாறி மாறி, உஷாவை பலாத்காரம் செய்தனர். விடிய விடிய இந்த கொடூரத்திற்கு பிறகு, காலை 5 மணியளவில் உஷாவை வள்ளியாற்றின் கரைக்கு கொண்டு வந்து விட்டனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், குடும்பத்தோடு கொளுத்தி விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றனர். இதற்கிடையே வேலைக்கு சென்ற தனது மகளை காணாமல் அவரது பெற்றோர் தேட தொடங்கினர். அதிகாலையில் அலங்கோலமான நிலையில் உஷா வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இரு நாட்கள் வீட்டுக்குள்ளேயே உஷா இருந்தார். பின்னர் இது பற்றி நேற்று தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, காரோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதாசிவம் (30) என்பவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.