மக்கள் நல்வாழ்வுத் துறையில் தி.மு.க. அரசு சாதனைகள் : முதல்வர்
சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையில் தி.மு.க. அரசு செய்த திட்டம், சாதனைகளை முதல்வர் கருணாநிதி விளக்கியுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு வட்டாரத்திலும் 30 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரூ. 104 கோடியே 53 லட்சம் செலவில் கடந்த 5 ஆண்டுகளில் 165 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன நவீன மருத்துவக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதிஆண்டில் மேலும் 300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.18 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொந்தக் கட்டடங்கள் இல்லாத 20 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.4 கோடி செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ரூ.5 கோடியே 74 லட்சம் செலவில் கணினிகள் வழங்கப்பட்டு இணைய தளம் வாயிலான தகவல்கள் தினந் தோறும் பெறப்படுவதுடன் ஆரம்ப சுகாதார நிலையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் கண்காணிக்கப்படுகின்றன. ஓர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு நடமாடும் மருத்துவக் குழு என்ற அளவில் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ரூ.37 கோடியே 18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவக் குழுவிற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர், செவிலியர், உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழு தொலைதூரக் கிராமங்களுக்குச் சென்று, அங்கு வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகிறது. 28-2-2025 வரை 3 லட்சத்து 98 ஆயிரத்து 800 முகாம்கள் நடத்தப்பட்டு, 2 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 896 பேர் பயனடைந்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளில் ரூ.1,282 கோடி மதிப்பிலான தரமான மருந்துகளை வாங்கி அரசு மருத்துவ மனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கி மக்கள் பயனடைந்துள்ளனர். ரூ.600 கோடிக்கும் மேலான செலவில், புகழ்வாய்ந்த தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், 64 கூறு சி.டி.ஸ்கேன், லித்தோஸ்ட்ராப்ஸி, கலர் டாப்லர், செமி ஆட்டோ அனலைசர், கோபால்ட் தெரபி, லீனியர் ஆக்ஸலரேட்டர், பி.சி.ஆர். கருவி, டயாலிசிஸ் கருவி, கேத்லேப் போன்ற பல அதிநவீன மருத்துவக் கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்னும் இந்த அரசின் கொள்கைக்கேற்ப தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிவகங்கை, பெரம்ப லூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்படவுள்ளன. மேலும், அடுத்த கல்வியாண்டில் கடலூர், விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையை ரூ.100 கோடி செலவில் மேம்படுத்திடத் திட்டமிடப்பட்டு கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, சென்னை அரசு பல் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் ரூ.395 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
சென்னை மருத்துவக் கல்லூரிக்குப் புதிய கட்டடம், கூட்ட அரங்கம், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தங்கும் விடுதிகள் போன்றவை ரூ.76 கோடி செலவில் கட்டப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படுவதையொட்டி, அம்மருத்துவமனையில் ரூ.50 கோடி செலவில் அடுக்கு மாடி கட்டடம் கட்ட ஆணைகள் வெளியிடப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 கோடியே 82 லட்சம் செலவில் புற்றுநோய்ப் பிரிவு, தேனி நகரில் ரூ.10 கோடி செலவில் ஒரு சிறப்பு அரசு மனநல மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் புதிதாக ஒரு செவிலியர் பள்ளி ஆகியவை தொடங்கப்பட உள்ளன. விழுப்புரம், திருவாரூர் மாவட்ட மருத்துவமனை கள் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டடங்களில் செவிலியர் பள்ளி, நகர நல மையம் ஆகியவை நடப்பு ஆண்டில் தொடங்கிடவும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தில், 198 அரசு மருத்துவமனைகளில் ரூ.285 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இளம் சிசு மரணம் அதிகம் நிகழும் 15 மாவட்டங்களில், கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு தேவையான மருத்துவ உபகரணங்களுடன் ரூ.11 கோடியே 48 லட்சம் செலவில் இளம் சிசு தீவிர கவனிப்பு மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 0-1 வயது வரையுள்ள பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்கும் அவசர கால சிகிச்சை திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்குப் பொருந்தும். இத்திட்டத்திற்கான விளக்க அட்டை 26-2-2011ல் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்புத் திட்டம் ரூ.5.66 கோடியில் 26-2-2011ல் துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.