குன்னூர்: குன்னூரில் பாலில் ஆசிட் கலந்து கொடுத்து 2 பெண் குழந்தைகளை கொன்ற இளம்பெண், தானும் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் மற்றும் சகோதரருக்கு அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் வசிப்பவர் கோதண்டபாணி (36), பழ வியாபாரி. மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு சுஷ்மிதா (6), வர்னிதா (2) என்ற மகள்கள் இருந்தனர். நேற்று சங்கீதா குழந்தைகளுடன் அங்குள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று திரும்பினார். மதியம் திடீரென வீட்டுக்கு வெளியே வந்த சங்கீதா வாந்தி எடுத்தார். அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். சிறிது நேரத்தில் சங்கீதாவின் பெற்றோரும் சகோதரரும் தற்செயலாக வீட்டுக்கு வந்தனர். கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. பதற்றமடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சங்கீதாவும் குழந்தைகளும் மயங்கிக் கிடந்தனர். உடனடியாக அவர்களை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
குன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நகையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை பாலில் கலந்து 2 குழந்தைகளுக்கு கொடுத்து கொன்று விட்டு, தானும் குடித்து சங்கீதா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. வீட்டில் சங்கீதா எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் சிக்கின. சகோதரர் செந்திலுக்கு எழுதியிருந்த கடிதத்தில், ‘தவிர்க்க முடியாமல் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கான இறுதி காரியங்களை நீதான் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். போலீசாருக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தில், ‘தற்கொலைக்கு யாரும் காரணமல்ல. எனக்கும் எனது 2வது குழந்தைக்கும் அடிக்கடி உடல் சரியில்லாமல் போகிறது. இதனால் இந்த முடிவை எடுத்தேன்’ என்று எழுதியிருந்தார். இதுகுறித்து கோதண்டபாணியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.