ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு
சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சே 20ம் தேதி இந்தியா வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜன் (28) நேற்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீத தீக்காயத்துடன் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். விஜயராஜனிடம் சேலம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று மதியம் ஒரு மணியளவில் விஜயராஜன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் விஜயராஜனின் குடும்பத்தினர் பிரேத பரிசோதனைக்கான ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தனர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டு கதறி அழுதனர். மேலும் ராஜபக்சேவை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.