பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு அதிபர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க பிரதமர் அஷ்ரப் சம்மதம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 2007ம் ஆண்டு அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். அதன்பின் நாடு திரும்பிய பெனசிர், தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆசிப் அலி சர்தாரி அதிபரானார். சர்தாரிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமராக இருந்த கிலானிக்கு கோர்ட் உத்தரவிட்டது. அவர் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தின் கீழ் பதவி இழந்தார். அதன்பின், கடந்த ஜூன் மாதம் ராஜா பர்வேஸ் அஷ்ரப் பிரதமரானார். சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க ராஜாவுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சர்தாரி மீது நடவடிக்கை எடுக்க அஷ்ரப்பும் மறுத்ததால் அவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 2வது முறையாக அஷ்ரப் இன்று கோர்ட்டில் ஆஜரானார். அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்வதாக சுவிஸ் அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் முன்னாள் தலைமை வக்கீல் எழுதிய கடிதத்தை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் பிரதமர் தெரிவித்தார். இதுதொடர்பாக சுவிஸ் அதிகாரிகளுக்கு புதிய கடிதம் எழுத அவகாசம் வேண்டும் என்று அஷ்ரப் வேண்டினார். இதை ஏற்ற நீதிபதிகள் வரும் 25ம் தேதி வரை அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்தனர். எனினும், இனி வரும் விசாரணையின் போது, கோர்ட்டில் பிரதமர் ஆஜராக தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிபர் சர்தாரி மீதான ஊழல் புகார்களை மீண்டும் விசாரிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.