விசாரணைக்கு போலீஸ் அழைத்ததால் கிணற்றில் குதித்து மகனுடன் தாய் தற்கொலை
பாலக்காடு: விசாரணைக்கு போலீஸ் அழைத்ததால், கிணற்றில் குதித்து மகனுடன் தாய் தற்கொலை செய்துகொண்டார். புதரை பிடித்ததால் மகள் தப்பினார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மாட்டுமந்தையை சேர்ந்தவர் கணேஷ். கூலி தொழிலாளி. மனைவி பிந்து(29), அருகில் இருந்த ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் வேலை செய்த வீட்டில் இருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியை திருடி தோழியிடம் கொடுத்து அடமானம் வைத்துள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக பாலக்காடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிந்துவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் திருடியதை ஒப்பு கொண்டார். நகையை மீட்டு தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று கணவன்மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. விசாரணைக்கு வருமாறு காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் வீட்டின் அருகில் இருந்த பொது கிணற்றில் பிந்து, மகன் அகில்(8), மகள் கோபிகா(11) ஆகியோர் குதித்தனர். பொதுமக்கள் பார்த்து பாலக்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்த புதர் ஒன்றை பிடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த கோபிகாவை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீரில் மூழ்கிய பிந்து, அகில் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலக்காடு வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.