பொன்னேரி: வீட்டில் தம்பதியை தாக்கி 80 பவுன் நகை, ரூ.2 லட்சம், வெள்ளி பொருட்களை ஜட்டி கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர். பொன்னேரியில் நேற்று நள்ளிரவு நடந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பொன்னேரி பொன்நகர் அடுத்த செஞ்சியம்மன் நகரில் வசிப்பவர் தயாளன் (52). சென்னை ராயபுரம் குடிநீர் வாரிய அலுவலகத்தில் நேர காப்பாளராக உள்ளார். மனைவி நவமணி (48), மகன் நரேஷ் (25). நேற்று இரவு சாப்பிட்ட பின், வீட்டின் முன் அறையில் தயாளன், மனைவி தூங்கினர். நரேஷ் வீட்டின் மற்றொரு அறையில் தூங்கினார். நள்ளிரவில் தயாளன் வீட்டின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 80 பவுன் நகை, ரூ.2 லட்சம், 5 கிலோ வெள்ளி பாத்திரங்களை மூட்டை கட்டி கொண்டு வெளியே எடுத்து வந்தனர். இருட்டில் வீட்டின் முன் அறையில் படுத்திருந்த நவமணி காலை கொள்ளையர்கள் மிதித்துள்ளனர். இதில் அவர் திடுக்கிட்டு எழுந்தார். வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு தயாளனும் உடனே எழுந்து லைட்டை போட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் கடப்பாரையால் தயாளன் தலையில் தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தடுக்க முயன்ற நவமணியையும் தாக்கிவிட்டு நகை, பணத்துடன் கொள்ளையர்கள் தப்பியோடினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். தூங்கி கொண்டிருந்த நரேசும் வெளியே வந்தார்.
காயம் அடைந்த தம்பதிகளை பொன்னேரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தயாளன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பால் வியாபாரி தேவன், சிமென்ட் வியாபாரி பிரகாஷ் ஆகியோர் வீட்டின் கிரில் கேட்டை கொள்ளையர்கள் அறுத்துள்ளனர். ஆனால் கொள்ளை ஏதும் போகவில்லை. தகவல் அறிந்து எஸ்பி ரூபேஷ் குமார் மீனா, கூடுதல் எஸ்பி செந்தில் குமார், டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், எஸ்ஐ குமார் மற்றும் போலீசார் விசாரித்தனர். கைரேகை நிபுணர் சங்கர் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்தார். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தயாளன் கூறுகையில், நள்ளிரவில் வீட்டில் கொள்ளையர்கள் நடமாடுவதை அறிந்து மின் விளக்கை போட்டேன். என்னை கடப்பாரையால் கொள்ளையர்கள் தலையில் தாக்கினர். கொள்ளையர் 3 பேர் வந்தனர். அவர்களுக்கு 25ல் இருந்து 30 வயதுதான் இருக்கும். உடம்பில் எண்ணெய் தடவியிருந்தனர். ஜட்டி மட்டும் அணிந்திருந்தனர் என்றார். நவமணி கூறுகையில், தூக்கத்தில் காலை யாரோ மிதிப்பது போன்று தோன்றியது. திடுக்கிட்டு எழுந்தேன். இருட்டில் நடமாடிய உருவத்தை பார்த்து கூச்சலிட்டேன். அப்போது என்னை கொள்ளையர்கள் தாக்கினர். காயம் அடைந்த எங்களை பொன்னேரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு இருந்த நர்ஸ்கள், போலீஸ் கேஸ் என்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். இரவு பணியில் டாக்டர் இருந்ததாக தெரியவில்லை. ரத்தம் சொட்டிய நிலையில் நீண்ட நேரம் சிகிச்சைக்காக காத்திருந்தோம் என்றார்.
மக்கள் பீதி ஒரு வாரத்தில் மீஞ்சூர் அருகே அனுப்பம்பட்டு பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்தது. பொன்னேரி திருவேங்கடபுரத்தில் பகலில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இப்போது கடப்பாரையால் தாக்கி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொள்ளை நடந்து வருவதால், பொன்னேரி, மீஞ்சூரில் மக்கள் பீதியில் உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook